இணையத் தமிழ்த் தொண்டர் தொகையாக விளங்கும் இணைய ஆற்றுப்படை

  

          

பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்களின் மதிப்புரை

தமிழுக்குத் தொண்டு செய்வோரை நாளும் அறிமுகம் செய்து வரும் நற்றிமிழ்த் தொண்டர்,  இணைய ஆற்றலாளர்  அறிஞர் மு. இளங்கோவன் ஆவார். மரபில் கருக் கொண்டு நவீனத்தில் உருக்கொண்டவர். புதுச்சேரியின் தமிழ் அடையாளங்களில் அவரும் ஒருவர். உலகு தழுவிய தொல்காப்பிய அறிஞர். அவரின் புதிய படைப்பாக்க நூல் இணைய ஆற்றப்படை.

 திறனாய்வாளர்களாக உருவானபின் படைப்புக்கண் பலருக்குத் திறப்பதில்லை. இணையத்திற்கு வந்தபின் மரபில் நோக்கம் கொள்வதில்லை. எழுத்து சிறப்பானால் பேச்சில் ஒளிரமுடிவதில்லை.  பாடல் திறன் இருந்தால் மற்றவை இருப்பதில்லை. இசைத் திறன் நுகர்வதற்கு வாய்ப்பே இல்லை. இதுபோன்ற பல இல்லாமைகளுக்கு இடையில் இல்லாமைகளே இல்லாதத் தமிழறிஞர் மு. இளங்கோவன்.   படைப்பாளர், திறனாய்வாளர், இணைய ஆற்றலர், கவிஞர், நாட்டுப்புறப் பாடலாசிரியர், நல்ல பேராசிரியர், எழுத்துக் கலை வல்லவர், பேச்சுக்கலையில் சிறந்தவர். பாடல்கலையில் முத்தெடுப்பவர். தமிழிசை அறிந்தவர். இவரின் மற்றொரு ஆற்றுப்படை தற்போது  இணைய ஆற்றுப்படையாக அமைந்து, இணையம் கற்போருக்கு வழிகாட்டி வரலாற்று நூலாக அமைகிறது.

 இணைய ஆற்றுப்படை என்ற இந்நூல் தொகை நூல். இணையத் தமிழ்ச் செய்திகளைத் தொகுத்துச் சொல்வது மட்டும் இத்தொகை நூலின் தன்மை அன்று. திருத்தொண்டர் தொகை போல இது ஒரு தொகை நூல். இதனை அடியொற்றி, இதனுள் சுட்டப்பெற்று இணையத் தமிழ்த் தொண்டர்களை விரித்துப் பாட ஒரு அந்தாதி, மற்றும் ஒரு புராணம் செய்யப்பட வேண்டும். இந்தச் சுந்தரனார் தொட்ட பணியை விரிவு படுத்த, நம்பியும் வருவார். சேக்கிழாரும் வருவார்.

 நூலின் ஒவ்வொரு அடியும் பொன்னடி. நேர்த்தியான , அடத்தியான செம்மைத் தமிழில் செய்யப்பட்ட ஆற்றுப்படை  இணைய ஆற்றுப்படை. இணையத்தில் இணைய மறுப்பவரையும் இணைய வைக்கும் இவ்விணைய ஆற்றுப்படை. இது தமிழின் தமிழரின் வளர்ச்சியை அளந்து உரைக்கிறது. இணையத் தமிழின் இனிய வளர்ச்சியையும் இலக்கியச் சுவையில் தருகிறது

‘‘கல்லிலும் செம்பிலும் கவின்பனை ஏட்டிலும்,

விண்ணியல் நிலத்தியல் விரிந்த வாழ்வியல்

அறிவியல் மருத்துவம் அரும் பொறியியல் எல்லாம்

குறிப்பாய் உரையாய் கொண்ட  செய்யுளாய்

முன்னோர் காத்தனர்

என்பது தமிழின் , தமிழரின் நேற்றைய நிலை

          அறிவுத் துறையில் அரசோச்சிய

          குமரிக்கடல் முனைக் கொள்கைத் தமிழர்

          கணினித் திரையில் கவினுறு தமிழை

          நிலைபெறச் செய்து அலை புகழ் பெற்றனர்

          இந்திய மொழிகளில் இணையம் கணினியென

          முந்தித் தோன்றிய முதல்மொழி தமிழாம்

என்று இன்றைத் தமிழின் இனிய நிலையை இணைய ஆற்றுப்படை பதிவு செய்கிறது

          கம்பன் பாடிய வாசுதேவனார் 

          விசய குமாரின் சரசுவதியாரும் 

          கோவிந்தராசனாரின் பல்லாடமும் 

          அணங்கிடை வயங்கிய குப்புசாமியார் 

          கனடா நாட்டின் இதயப் பிறப்போர் 

          துணைவன் தந்த கதிரவர் தினமலர் 

         ஏட்டின் தீரர்  கிருட்டின மூர்த்தியார் 

    முரசு அஞ்சலின் முத்து  நெடுமாறன் 

    பொன்மொழி தந்த பொறிஞர் மூர்த்தி 

என்ற அடிகள் எல்லாம் இணையத் தமிழ்த் தொண்டத்தொகையே ஆகும்

          மேலும் இவ்விணைய ஆற்றுப்படையில் இந்தி எதிர்ப்பு, மது எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு  ஆகிய தமிழரசியலும் இடம்பெற்று இருப்பது கருதத்தக்கது. இணையப் பல்கலையின் செயல்பாடு, உலகத் தமிழ் இணைய மாநாடுகளில் இணையத் தமிழ் வளர்ந்த நிலை, தமிழ் விசைப்பலகை தோற்றம் , ஒருங்குறி எழுச்சி போன்ற பல  இணையத் தமிழ் வளர்ச்சி செய்திகளும் வரலாற்று முறையில் தரப்பெற்றுள்ளன

          இணையத்தில் உணவு மணக்கிறது. தமிழகத்து ஊர்களின் உயர்வான உணவுப்பொருள் வரிசை கட்டுகிறது. நல்ல ருசியாளர் மு. இளங்கோவன் என்பதையும் அவர் நல்ல ஊர்சுற்றி என்பதையும்,  இவ்வாற்றுப்படை காட்டுவதன் வாயிலாக உணவிற்கும் ஆற்றுப்படை செய்துள்ளது

          இந்நூலின் முன்னுரையும், தமிழ் வளம் தாங்கிய இணையதளங்கள் என்ற பகுதியும், தமிழ் இணையத்திற்குப் பங்கேற்றோர் பற்றிய புகைப்பட விவரக்குறிப்பும் (அரசியலுக்கு அப்பாற்பட்டு) பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்யப்பட வேண்டியன. இதனால்  இணையத் தமிழ் மாணவர்கள்  பல நிலைகளில் பயன்பெறுவர்

          நூலின் நிறைவில்சங்க இலக்கிய ஆற்றுப்படை வடிவில் கங்கை கொண்ட சோழபுரத்து அண்மிய இடைக்கட்டு எனும் ஊரில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகெய்திய அசோதைமுருகேசன்  இணையரின் தலைமகனார்  இளங்கோவனார் இயற்றிய இணைய ஆற்றுப்படை முற்றிற்றுஎன்ற முத்திரை -  உலகின் ஒரு பக்க மூலையில் இருந்து  உலகை நோக்கி எழுந்த அறைகூவல் என்பதில் ஐயமில்லை

   இந்த இனிய இணைய நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் முனைவர் நாக. கணேசன் சிறந்த அறிவியலாளர். தமிழ்ப் பற்றாளர். இணைய ஆற்றலர். தக்கார் தகவறிந்து பழகும் அன்பர். உற்றார் உறவினராய்த் தமிழ் மக்களை நேசிக்கும் நல்லார். அவரின் பதிப்பாக இந்நூல் வருவது சிறப்பு.  அவரின் இணைய மாநாட்டு முன்னெடுப்பில் இதுவும் ஒன்று. இனிதாய் ஒன்று.

நன்றி: மானிடள்


இணைய ஆற்றுப்படை தேவைக்கு!

பேசி: +91 9442029053

மின்னஞ்சல்: muetamil@gmail.com


Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்