இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்

 

பாவலர் மா. வரதராசன்

 காலந்தோறும் மாறிவரும் மாற்றங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மொழியே நிலைத்துவாழும் சிறப்பைப் பெறுமென்பது மொழியியலார்தம் துணிபு

 நந்தமிழ்மொழியின் சிறப்பை மட்டுமே சொல்லி இறுமாந்து கொண்டிராமல், கால மாற்றத்திற்கேற்ப அதன் உள்ளீட்டைத் தகவமைப்பதும், அதனை இளையோரிடம் கடத்துவதும் இற்றை முதன்மைத் தேவை என்பதை நன்குணர்ந்த அறிஞர் பல்லோர் ஆற்றிய பெரும்பணிகளால் நம் தமிழ்மொழி இணையவுலகிலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது

 அத்தகு சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் இன்றியமையாத செயலாகும். இக்காலத் தலைமுறைக்கு இணையத்தைப் பற்றி நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், தமிழின் சிறப்போடு இணையத்தின் பயன்பாட்டை அவர்களுக்குத் தெரிவிக்கும் போதுதான் தமிழின் சிறப்பு அடுத்தடுத்த தலைமுறைக்கும் தெரியவரும்

 இந்த அரியதொரு பணியைச் செய்த உணர்வாளர் பலரின் பேருழைப்பையும், அப்பணியினூடாக வெளிப்படுத்தப்பட்ட தமிழின் அருமையையும் தமிழார்வலர் அனைவருமே பயன்பெறும் நோக்கில் எழுதப்பெற்ற " இணைய ஆற்றுப்படை" என்னும் சீரிய நூலொன்றைப் படித்துவக்கும் பெரும்பேறு எனக்கு வாய்த்தது

 உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற சீர்மிகு அமைப்பின்வழி தொல்காப்பியத்தைப் பரப்புவதும், வலைப்பூ வழியே தமிழறிஞர் வாழ்வியலைப் பதிவு செய்வதும் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் அரும்பெரும் நூலே "இணைய ஆற்றுப்படை" என்னும் அரும்பெரு நூலாகும்

 தான்பெற்ற பயனை மற்றவரும் பெற வழிகாட்டுவது (ஆறு -வழி) ஆற்றுப்படுத்துவது "ஆற்றுப்படை"யாகும்.  இணையத்தின் பயனைப் பெற்ற ஒருவர் மற்றவர்க்கும் பயன்தரும் வகையில் அதன் சிறப்புகளையும், பயன்களையும் கூறி அவ்விணையத்தைக் கையாளும் நெறிகளைக் காட்டி இணையத்தின் வழிச்செல வைக்கின்ற காரணம்பற்றி "இணைய ஆற்றுப்படை" என்னும் பெயருடைத்தாயிற்று இந்நூல்

இந்நூல்,

பழந்தமிழ் நூல்களின் அச்சுப்படிகள் கிடைக்கின்ற இணையதளங்கள் யாவை?

தமிழறிஞர்தம் வாழ்வியலையும், அவர் தமிழுக்காற்றிய அரும்பெரும் பணிகளையும் அறிதற்குரிய இணையதளங்கள் எவை

தமிழிலக்கண,இலக்கியப் புதையல் கிடைக்கின்ற வலைப்பக்கங்கள் எவை

என்பனவற்றையும்,

 இணையத்தில் முதன்முதலில் தமிழை உட்புகுத்தியவர், அதற்குதவும் தட்டச்சு விசைப்பலகையை உருவாக்கியோர் முதலிய செய்திகளைப் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது

 ஆம்.... ஆனால்,  இவையெல்லாமும் மரபு செய்யுள் வடிவத்தில்.  563 அடிகளையுடைய நேரிசையாசிரியப் பா வடிவில் அமைந்த இந்நூல் மரபில் வெளிவந்த முதல் ஆற்றுப்படை நூலாகும்

 தமிழரின் பெருமையைக் கூறித் தொடங்கும் இவ்வாற்றுப்படை அதன் இலக்கணத்தை மீறாமல், அத்தமிழர்தம் இக்கால அவலம், உலகின் போக்கில் மொழி கடக்க வேண்டிய பயணம் என்பவற்றையும், இணையத்தின் தோற்றம், வளர்ச்சி, நன்மை தீமை, பரவலாக்குந் தன்மை, வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த தன்மை என அனைத்தையும் அலசி ஆராய்கிறது இந்நூல்

 நூலாசிரியர் திருப்பனந்தாள் கல்லூரியில் செந்தமிழ் பயின்றதாலோ என்னவோ அவருடைய எழுத்திலும் பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழ் நடையைக் காண முடிகிறது. இது இந்நூலின் தனிச்சிறப்பென்றே கூறலாம்

 ஆசிரியப் பாவின் ஓட்டத்தை அருந்தமிழ் நடையில் அமைத்திருக்கும் ஆசிரியர் அருந்தமிழ்ச்சொற்கள் பலவற்றை இற்றை இளையோர்க்கு அறிமுகம் செய்கிறார்.  ஆனால் அவற்றின் பொருளைக் கூறாமல் விட்டிருப்பது ஏனென்று விளங்கவில்லை. ஒருவேளை...அதன்பொருளைத் தேடித் தெளியட்டும் என்று விட்டிருக்கலாம்

 சுவையான எதுகை மோனைகளால் பாடலின் பலவிடங்களில் மனம் அழுந்திவிடுகிறது.

"கலயத் தேனுக்குத் துளியே சான்றாம்" போல

“அச்சுக் கூடத்தார் அடைந்த விடுதலைக்குக்

கணினியின் வருகை காரண மென்பேன்”…. 

“தோற்றம் பெற்றே ஏற்றம் சிதைத்தது”… 

“ஆயிர மாயிரம் அருந்தமிழ்ப் படைப்புகள்

தேங்கிக் கிடப்பதை ஏங்கி யுணர்ந்த”…. 

“அணிமணி யிழந்தவர் ஆயிர மாயிரம்” 

இவ்வாறு இன்னும் பலவுள

தமிழ்வளம் தாங்கிய இணையதளங்கள் 

தமிழிணையத்துறைக்குப் பங்களித்தோர் 

எனத் தனியே தொகுத்துத் தந்திருக்கும் பகுதிகள் பெரும்பயனளிப்பவை

மொத்தத்தில்,

இணையத்தின் பயன்பாடு இருக்கும் வரையில் இந்நூலின் பயன்பாடு காலத்தால் பேசப்படும் சிறப்பைப் பெற்றிருக்கிறது

 அரியதொரு நூலை ஆக்கித் தந்ததன் மூலம் அருந்தமிழ்க்கு நற்றொண்டாற்றிய முனைவர் அவர்களை இத்தமிழுலகம் என்றைக்கும் போற்றிப் புகழும். நன்றியுடன் நினைத்துப் பார்க்கும்

அன்பு நண்பர்களாகிய உங்கள் அனைவரிடத்தும் யான் வைக்கின்ற வேண்டுகோள் இதுதான்... 

இந்நூலை அன்னாரிடத்து வாங்கிப் பெற்றுப் படித்துப் பயன்பெற வேண்டும்.

நூலைப் பெற... 

முனைவர் மு.இளங்கோவன்

அலைபேசி : 94420 29053    மின்னஞ்சல்: muetamil@gmail.com

நன்றி: 18.07.2024, முகநூல் பதிவு, https://www.facebook.com/profile.php?id=100009473376123

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!