இணைய ஆற்றுப்படை நூலுக்கு அறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய சிறப்புப் பாயிரம்…

 


யான் எழுதிய இணைய ஆற்றுப்படை என்ற நூல்மெல்லவே கருவிருந்துஉருவாகிய நூல். 563 ஆசிரியப்பா அடிகளில் வெளிவந்திருக்கும் இந்த நூல் தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்துறை வல்லுநர்கள், படைப்பாளிகள் கையினுக்குச் சென்று சேர்ந்தவண்ணம் உள்ளது

 என் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அண்மையில் இணைய ஆற்றுப்படை நூலினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையின் மேனாள் தலைவர் முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் பார்வைக்கு வைத்தார்கள். சங்கநூல் பயிற்சியும், இலக்கணப் பெரும்புலமையும், தமிழ் மரபறிவும், மொழிபெயர்ப்பாற்றலும், நாவன்மையும், சால்பும் கொண்ட நம் பேராசிரியர் பெருந்தகை கு.வெ.பா. ஐயா அவர்கள் இணைய ஆற்றுப்படையைக் கற்றுதுடன் அமையாமல் ஒரு சிறப்புப் பாயிரம் வரைந்து நூலைப் பற்றியும் நூலாசிரியனைப் பற்றியும் பாராட்டி அனுப்பினார்கள். அவர்களின் கேண்மையை நினைந்து நினைந்து மகிழ்வில் திளைத்து வருகின்றேன்

நாடுநா டெனப்பறந் தெங்கணும் தமிழைப் 

பாடுமோர் பாணன் யாழ்சுமந் தேகல்போல் 

கணினி சுமந்தே கணக்கில் பதிவுசெய் 

பணிபுரிந் தனன்காண்” 

என்று என் பணிகளைச் செழுந்தமிழ் உவமையால் சித்திரமாக்கிக் கண்முன் கொண்டுவந்து காட்டியுள்ள திறத்தினை எண்ணி எண்ணி உவக்கின்றேன்

இந்த ஓர் உவமை போதும்; என் பணிகளை என்றும் நின்று பேசும்.  பதினாறு நூறாயிரம் பொன்பரிசளித்த சோழ மாமன்னனின் பரிசாக இந்த உவமையை எண்ணிப் பேராசிரியரின் தமிழ்த்திருவடிகளைப் போற்றி வணங்கி, அவர்களின் பாராட்டினை நன்றியுடன் ஏற்கின்றேன்

கு.வெ.பா. ஐயா

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் பாயிரம் 

இளங்கோவ னென்னும் இனிய கேள்வன்

இளங்கோவ னென்னும் இனிய கேள்வன் 

வளமார் தமிழ்நெறி மனத்திடைக் கொண்டோன் 

நாடுநா டெனப்பறந் தெங்கணும் தமிழைப் 

பாடுமோர் பாணன் யாழ்சுமந் தேகல்போல் 

கணினி சுமந்தே கணக்கில் பதிவுசெய் 

பணிபுரிந் தனன்காண்;  பண்பார் இணையம் 

படர்ந்து தொடர்ந்து பார்முழு தளாவிக் 

கிடந்து, மறைந்து, கேள்வி யுறாதே 

முடங்கிய தமிழ்நூல், முன்னோர் கலைகள் 

மாய்ந்த பண்டைய வரலா றெல்லாம் 

ஆய்ந்தாய்ந் தளித்த அருஞ்செயல் வியப்பே

இணையப் பல்கலை என்றோர் அமைப்பை 

முனைந்து நிறுவிய குழந்தை சாமியும் 

பொன்னவைக் கோவெனும் பொற்பார் செம்மலும் 

என்னை அழைத்தே இணையத் திரைக்கே 

பாடம் ஒன்றைப் படைக்க வேண்டினர்

பாடல்சால் கவிஞன் பாவேந் தனையே 

குறித்துயான் வரைந்த குறிக்கோ ளியம்பும் 

முதற்கட் டுரையாய் வையம் கண்டது

விதையிட் டவன்நான்; வேண்டும் பணிபல 

சிதையா தியற்றிச் செழுமை செய்தனென்

இன்று வையம் சென்றோர் மால்போல் 

நின்றே அளக்கும் நெடும்புகழ்க் கணினி

இணையம், கணினி, கையலைப்பேசி

பணிபல இயற்றலைப் பண்பார் இளங்கோ 

இனித்திடக் கூறினன் இந்நூ லகத்தே

வாழ்த்துவன் யானே வளர்க எனவே

23. 07. .2024 

 

நூல் பெறுவதற்குரிய தொடர்பு எண், மின்னஞ்சல்

+91 9442029053 / muetamil@gmail.com

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்