முனைவர் மு. இளங்கோவன் படைத்த இணைய ஆற்றுப்படை - முனைவர் கடவூர் மணிமாறன்



முனைவர் இளங்கோ வனாரின் படைப்பாம்
இணைய ஆற்றுப் படையெனும் இந்நூல்
இணைய உலகுக் கினியநற் கொடையே!
துணையாய்ப் பலர்க்கும் பயன்படும் தூதுநூல்!
தமிழக வரலாறு, தமிழ்மொழி வரலாறு
ஆசிரியப் பாவில் அழகுற உள்ளன.
இணையப் பல்கலைக் கழகத் தோற்றம்
பணிகள், இற்றை நிலையெலாம் இனிதுறப்
பட்டிய லிட்டுப் படிக்கத் தந்துளார்.
மட்டென இனிக்கும் மாத்தமிழ் மொழியில்;
பலரும் பயன்பெறப் பன்னூறு செய்தியை,
நலமிகு கருத்தை நவிலும் பனுவல்!
கையடக்கத்தில் கணினி இருப்பினும்
ஐயம் போக்கும் அரிய பணியை
நாளும் செய்வதை நலமார் இளங்கோ
இந்த நூலினில் இனிதுற மொழிந்தார்!
உலகு தழுவிய முயற்சி யாவும்
இவரின் நூலால் இனிது தெரிந்தன.
தமிழரின் கூரிய அறிவுப் பரப்பை
அமிழ்தாய் நூலில் அழகுறப் பதித்துளார்.
விக்கி என்பது அவாயெனும் மொழிச்சொல்
விக்கிப்பீடியா பன்மொழிக் களஞ்சியம்,
இணையத் தளமாம் நூலகம் தன்னில்
பனையளவாகப் பல்லாயிரம் நூல்கள்
படிக்க அச்சிடப் பயனாய் அமைந்துள:
முடமிலாத் தமிழர் மூளைச் செழுமை
அறிவியல் தொழில்கள் நுட்ப உத்திகள்
பெரிதும் ஆவணம் ஆகிய மாட்சி:
இணையம் இந்நாள் வாழ்வியல், உலகியல்
நினைக்கும் தோறும் நெஞ்சம் மணக்கும்!
என்பன வெல்லாம் இந்நூல் உணர்த்தும்
பன்முகத் திறத்தைப் படித்துணர் வோமே!

குளித்தலை,
22.08.2024

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்