இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

 


நனிபுக ழொடுபல ஆண்டுகள் வாழி!

பாவலர் தெ. வச்சிரவேலன், சிங்கப்பூர்


கன்னலின்  இனிமையும் கனிமொழி வாய்மையும்

தன்னலம் இல்லாத் தம்முளத் தூய்மையும்

புன்னகை மாறாப் பொலிமுக முங்கொண்ட

ஒண்டமிழ் மொழிமேல் தன்னுயிர் வைத்த

அன்புக் கினியர் ஆன்ற ஆர்வலர்

துறைதொறும் தெளிந்த நிறைமொழி யாளர்

அன்னார் இளங்கோ அறிமுகம் எனக்குப்

பன்னாள் பழகிய பழக்கம் போன்று

சென்ற ஆண்டு சிங்கைத் தெருவினில்

சிறப்பாய் அமைந்தது செந்தமிழ் உணர்வொடு

பிறப்பால் உணர்வால் பைந்தமிழ் போற்றும்

நட்பினர் ஆனோம் நாளும் வளர்ந்த

நட்பில் நயந்தோம் நலனொடு காப்போம்

அண்மையில் அவர்தம் அருமை நூலைக்

கண்டேன் மலைத்தேன் கவின்மிகு நடையில்

அகவல் யாப்பில் தகவாய் அமைந்த

இணைய ஆற்றுப் படையெனும் நன்னூல்

போற்றத் தகுந்த படைப்பாம் அதனுள்

தமிழகச் சிறப்பும் தமிழர் எழுச்சியும்

தமிழர் உலகப் பரவலும் இலங்கைத்

தமிழர் இன்னல் வாழ்வும் தொடங்கிக்

கணினி இணைய வரவும் பரவலும்

அணியாய்த் தொடுத்திங்கு அவைதாம் கண்ட 

அளவிளா வளர்ச்சியை அழகுற அடுக்கியும் 

தளராது உழைத்துத் தமிழ்க்கருந் தொண்டினை

ஆற்றிய சான்றோர் அறிஞர் பலரையும்

போற்றிப் பாடியும் புகழினை நுவன்றும்

ஆற்றுப் படுத்தும் ஐம்பது இணையத்து

ஏற்றங் கண்ட இழைகளை நிரலாய்ச்

சொன்னயங் கெழுமச் சுவைபல இலங்கக்

கற்பவ ரெல்லாம் பொற்பொடு பயன்கொளச்

சங்கப் பெரும்புகழ்ச் சான்றோர் நெறியினில்

இங்கிப் பெருமகன் எழுதித் தொகுத்துளார்

எத்தனை எத்தனை இவர்தம் பணிகள்

மொத்தமும் தொகுத்தல் முடிமோ எளிதோ

உலகத்தொல் காப்பிய மன்றம் அமைத்தும்

பலமா நாடு  பாங்குறப் படைத்தும்

நல்லுரைச் சான்றோர் சொல்லுரை நல்கியும்

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியவழிப்

பண்ணிசைக் கலைஞர் கருவிகள் காட்டியும்

அந்நாள் தொட்டிந் நாள்வரை அழகாய்ப்

பட்டியல் இட்டும் படைத்த நூலிதைச்

சீர்த்த பெரும்புகழ்க் கூர்த்த மதியவர்

யார்க்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் 

அளித்துக் குன்றா அமுதச் சுரபிபோல்

அளித்த மேன்மையர் ஆர்க்குந் தண்புனல்

ஆற்றுப் பெருக்குஅற் றதுபோல் இந்நாள்

போற்றத் தகுந்தார் புவியுள் சிலர்தாம்

ஊற்றுப் பெருக்காய் உழைப்பார் இவர்போல்

உலகோர் பலரும் அறிந்திலர் உண்மை

இலகோ முடிமோ இவர்போன்று இயங்க

என்னே இவர்தம் உழைப்புத் தமிழ்க்குப்

பொன்னோ மணியோ பொருள்தாம் ஈடோ

கண்போல் மொழியைக் கண்டார் வாழ்வில்

இரவும் பகலும் எப்போதும் தமிழாய்

இருப்பார் உழைப்பார் எதிர்பார்ப்பு இன்றித்

தன்னே ரில்லா அன்னார் இளங்கோ

நன்னலம் நாற்பொருள் நனிபுக ழொடுபல

ஆண்டுகள் வாழியர் ஆர்கடல் விரிந்த 

வான்புகழ்ப் புதுவை மணலினும் பலவே.

08.10.2024

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்