எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில் இணைய ஆற்றுப்படை

நூலின் தகவல்கள் : நூல் : இணைய ஆற்றுப்படை ஆசிரியர் : மு . இளங்கோவன் பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம் இடைக்கட்டு , உள்கோட்டை ( அஞ்சல் ), கங்கைகொண்ட சோழபுரம் வழி , அரியலூர் மாவட்டம் – 612901 விலை : ரூ .100 அறிவுப்பெட்டகத்தின் வரலாறு ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று . ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள் . ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர் திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர் , பாணர் , பொருநர் , விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை . பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன . கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய , இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது . என் கல்லூரிக்காலத்தில் பாவலர் ம . இலெ . தங்கப்பா எழுதி...